Page Loader
அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி
சோனியா காந்தி, பி.ஆர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று 'தி டெலிகிராப்' பத்திரிகையில் தன் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி

எழுதியவர் Sindhuja SM
Apr 14, 2023
04:44 pm

செய்தி முன்னோட்டம்

மதம், மொழி, சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை பிரிக்க தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று(ஏப் 14) கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அறிஞரும் சீர்திருத்தவாதியுமான பி.ஆர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று 'தி டெலிகிராப்' பத்திரிகையில் தன் கட்டுரையை வெளியிட்டிருந்தார். 'அரசியல் சாசனத்தின் வெற்றி, ஆட்சி செய்பவரின் நடத்தையை பொறுத்தது' என்று அம்பேத்கர் கூறிய வாசகத்தை நினைவு கூர்ந்த சோனியா காந்தி, அம்பேத்கரின் எச்சரிக்கையை நாடு நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். மத்திய அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதுடன் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடித்தளத்தை பலவீனப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

details

சோனியா காந்தி இந்த கட்டுரையில் கூறி இருக்கும் கருத்துக்களின் சுருக்கம்

உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மக்களை துன்புறுத்துவதற்காக சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் தெரிந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதால் சமத்துவம் பாதிக்கப்படுவதுடன், இதனால், பெரும்பான்மையான இந்தியர்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். வேண்டுமென்றே வெறுப்பை பரப்பி இந்தியர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதால் சகோதரத்துவம் சிதைக்கப்படுகிறது. பிரச்சாரங்களின் மூலம் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதனால் அநீதி பெருகுகிறது. அனைத்து இந்தியர்களும், அவர்கள் எந்த குழுவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். இந்த சகோதரத்துவ உணர்வை நாம் எப்போதும் வளர்த்து கொள்ள வேண்டும். நமது வீடுகளையும், சமூகங்களையும், அமைப்புகளையும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.