தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தலைவர் தியாகராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தூத்துக்குடியில் கடந்த 2018ம்ஆண்டு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஸ்டர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் அங்குள்ள பலர் தங்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளதால், அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, பெருநகர நிறுவன சமூக பொறுப்பு நிதிக்கு இந்த தொழிற்சாலை மூலம் கிடைக்கப்பெறும் நிதிக்கொண்டு பள்ளி -கல்லூரி மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழு, விவசாயிகள்-மருத்துவ சேவைகள் போன்று பலவகையில் மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், ஸ்டர்லைட் தொழிற்சாலையின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்து சிலர் பொதுமக்கள் மத்தியில் தீய எண்ணத்தினை ஏற்படுத்தியதன் காரணமாக இந்த ஆலை மூடப்பட்டது.
50 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில் விளக்க கருத்தரங்கம்
இதனால் மேற்கூறியபடி, பலர் நிதியுதவி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தற்போது தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலையை திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்த ஆலையின் அறிவியல் பூர்வமான உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் 50ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில் விளக்க கருத்தரங்கம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் சிப்காட் காவல்துறை இதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். அவர்களது உத்தரவை ரத்துசெய்து, அனுமதியளித்து உத்தரவு விடவேண்டும் என்று அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நடந்த நிலையில், தூத்துக்குடி எஸ்.பி.யிடம் மனுதாரர் புதுமனு ஒன்றினை அளிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். தொடர்ந்து, எஸ்.பி., அதனை பரிசீலனை செய்து தேவையெனில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூட்டத்தை நடத்த அனுமதிக்கலாம் என்றுக்கூறி உத்தரவிடப்பட்டுள்ளது.