தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது
தூத்துக்குடி, முருகேசன் நகரில் வசிப்பவர் வசந்தகுமார், கூலித்தொழிலாளி. இவரது மகனான மாரிச்செல்வம்(23)தனியார் வணிக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதேபகுதியில் திருவிக நகரில் பால் வியாபாரம் செய்து வரும் முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகா. இவருக்கும் மாரிச்செல்வத்துக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தெரிந்து கார்த்திகா வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் கடந்த 30ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியோடு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்தினை மாரிச்செல்வம் வீட்டில் ஏற்றுக்கொண்டதால் இந்த ஜோடி அங்கு தங்கியிருந்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன் அங்கு சென்ற பெண்ணின் தந்தை உள்ளிட்ட சிலர் மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், நேற்று(நவ.,2) 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 இருசக்கர வாகனத்தில் வந்து மாரிச்செல்வம் வீட்டிற்குள் புகுந்து புதுமண தம்பதிகளை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்கள். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை, கொலை செய்யப்பட்ட தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 3 தனிப்படைகளை அமைத்தனர். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் காவல்துறை பெண்ணின் தந்தை முத்துராமலிங்கத்திடம் விசாரித்து வந்த நிலையில் இன்று(நவ.,3) அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர். பரத், கருப்பசாமி உள்ளிட்ட 2 உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை தற்போது காவல்துறை தீவிரமாக தேடி வருகிறார்கள்.