திருவண்ணாமலை கிரிவலம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
இறைவன் சிவபெருமானின் பஞ்சப்பூத தலங்களுள் ஒன்று தான் திருவண்ணாமலை. சிவனின் அக்னி ஸ்தலமாக உள்ள இந்த திருவண்ணாமலை கோயிலுக்கு, மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அன்றைய தினம் அங்கு கூடுவதால் கூட்டம் அலைமோதும் என்பது தெரிந்ததே. இதனை கருத்தில் கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை கிரிவலம் முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்
சென்னை-திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை-சென்னைக்கு பக்தர்கள் செல்ல வசதியாக இந்த பேருந்து சேவையினை அரசு இயக்க முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த சிறப்பு அதிநவீன பேருந்துகள் ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதியம் 3 மணி, 4 மணி மற்றும் மாலை 5 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் மறுநாளான ஆகஸ்ட் 2ம் தேதி திருவண்ணாமலையிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கு இந்த பேருந்துகள் புறப்படும். மேலும் இந்த சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த விவரங்களை அறிய கோயம்பேடு பேருந்து நிலையத்தின் தலைமையக தொலைபேசி எண்கள்.9445014463, 9445014416 மற்றும் பேருந்து நிலைய மொபைல் எண்.9445014452 உள்ளிட்டவைகள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.