திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு
தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடிவருகிறார்கள். இது குறித்த விசாரணையில் கடந்த 3ம் தேதி பெங்களூரில் ஓர் எஸ்பிஐ ஏடிஎம்'ல் கொள்ளை கும்பல் ஒன்று திருவண்ணாமலையில் செய்தது போலவே வெல்டிங் மெஷின் கொண்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளும் இதோடு ஒத்துப்போவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை-மாவட்ட எஸ்.பி. மறுப்பு
இந்த 2 சம்பவங்களையும் ஹரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பல் செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், 2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது என்றும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தையடுத்து தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே இது சம்பந்தமாக 6பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் ஓர் தகவல் வெளியானது. காரில் கொள்ளையர்கள் ஹரியானா தப்பிச்செல்ல முயன்றபொழுது அந்த 6 பேரும் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் குறித்து மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் கூறுகையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.