திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்
தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங்மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் கொள்ளையர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கொள்ளையர்களை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாகவுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடிவருகிறார்கள். இதுகுறித்த விசாரணையில் கடந்த 3ம்தேதி பெங்களூரில் ஓர் எஸ்பிஐ ஏடிஎம்'ல் கொள்ளைக்கும்பல் ஒன்று திருவண்ணாமலையில் செய்தது போலவே வெல்டிங்மெஷின் கொண்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும், அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளும் இதோடு ஒத்துப்போவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த 2 சம்பவங்களையும் ஹரியானாவை சேர்ந்த கொள்ளைக்கும்பல் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு விரைந்தது
இந்த சந்தேகத்தின் பேரில், 2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் ஐ.ஜி. கண்ணன் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரியவர்களை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டவில்லை, குறிப்பிட்டவற்றில் மட்டுமே காட்டியுள்ளார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதன்முறையாக புதிய தொழில் நுணுக்கத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.