Loading...
17/17: தேனி கிளை சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளும் சிக்கினர்
தேனி கிளை சிறையிலிருந்து தப்பியோடி அடர்ந்த வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த கைதிகள்

17/17: தேனி கிளை சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளும் சிக்கினர்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
05:24 pm

செய்தி முன்னோட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து நள்ளிரவில் தப்பியோடிய 17 விசாரணைக் கைதிகளையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு மீண்டும் கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகள் சிலர், தங்களுக்குள் ஒருவருக்கு வலிப்பு வந்தது போல் நடித்து நாடகமாடியுள்ளனர். இத்தகவலறிந்து கதவைத் திறந்து பார்க்கச் சென்ற சிறைக் காவலர்களைக் திடீரெனத் தாக்கிவிட்டு, பிரதான நுழைவுவாயிலைப் பூட்டிச் சாவியைக் கைப்பற்றி 17 கைதிகளும் ஒரே நேரத்தில் தப்பிச் சென்றனர். கடமை தவறல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக சம்பவத்தின் போது பணியில் இருந்த 9 சிறைக் காவலர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தனிப்படை

ட்ரோன் கேமராக்கள் மற்றும் 25 தனிப்படைகள்

தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க 25 சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காடுகள், மலைப்பாதைகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன தணிக்கை முடுக்கப்பட்டது.

அடர்ந்த வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த கைதிகளை தேட ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

பொன்முத்து செல்வம் மற்றும் ரெஜின் ஆகிய இருவர் வனப்பகுதித் தோட்டத்தில் பிடிபட்ட நிலையில், இறுதியாக தலைமறைவாக இருந்த உடன்பிறந்த சகோதரர்களான மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இதன் மூலம் தப்பியோடிய 17 பேரும் மீண்டும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "ஹாலிவுட் பாணியில் 'பிரிசன் பிரேக்' நிகழ்ந்துள்ளது" எனக் குறிப்பிட்டு, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மேலாண்மையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT