Loading...
தேனி சிறை உடைப்பு விவகாரம்: 9 காவலர்களை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
9 காவலர்களை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்

தேனி சிறை உடைப்பு விவகாரம்: 9 காவலர்களை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
01:22 pm

செய்தி முன்னோட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து ஒரே அறையை சேர்ந்த 17 விசாரணை கைதிகள் சிறை காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய விவகாரத்தில், பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததாக சிறைத்துறை காவலர்கள் 9 பேரை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் 200 கைதிகளை மட்டுமே அடைப்பதற்கான வசதிகள் உள்ள நிலையில், 334 கைதிகள் வரை அடைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பற்றாக்குறை

பாதுகாப்புப் படை பற்றாக்குறை

வழக்கமாக சுழற்சி முறையில் 100 காவலர்கள் வரை பணியாற்ற வேண்டிய இடத்தில், சம்பவம் நடந்த நேரத்தில் பிரதான வாயிலில் 7 பேருக்கு பதிலாக 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர்.

கைதிக்கு வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடி சிறைக் கதவை திறக்க வைத்த கைதிகள், காவலர்களை கொடூரமாகத் தாக்கியதுடன், ஒரு சிறைக் காவலர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

ஆய்வு

சிறைத்துறை டிஜிபி நேரில் ஆய்வு மற்றும் தீவிரத் தேடுதல் வேட்டை

சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து, தேக்கம்பட்டி சிறை வளாகத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தப்பியோடிய 17 கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.

கைதிகள் கேரளாவுக்கு தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இடுக்கி எல்லைப் பகுதிகளிலும், மதுரை, திண்டுக்கல் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் தீவிர வாகன பரிசோதனை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT