Loading...
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு
சிறைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைப்பு

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 02, 2026
06:28 pm

செய்தி முன்னோட்டம்

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் சுவரை ஏறி தப்பிச் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலத்தின் அனைத்துச் சிறைகளிலும் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குழு

முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு

சிறை உடைப்புச் சம்பவம் தொடர்பான காரணங்களைக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவின் விவரங்கள்:

தமிழ்நாடு முன்னாள் சட்டம் - ஒழுங்கு டிஜிபி திரிபாதி இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார்.

சிறைத்துறை கூடுதல் டிஜிபி சங்கர் மற்றும் சிறைத்துறை முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் தப்பியோட காரணமாக இருந்த துல்லியமான பாதுகாப்புக் குறைபாடுகள், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து இக்குழு நேரில் ஆய்வு செய்யும்.

ஆய்வு

பணிச்சுமை & பாதுகாப்பு உபகரணங்கள் ஆய்வு

சிறைகளில் தற்காலிகப் பணிச்சுமைக்கு ஏற்பப் போதுமான அளவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா மற்றும் அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதையும் இக்குழு மதிப்பீடு செய்யவுள்ளது.

அத்துடன், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த சிறைப் பாதுகாப்பு நடைமுறைகளை ஆராய்ந்து விரிவான அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கும்.

சிறைகளில் பாதுகாப்பைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கும் சிறைத்துறைக்கும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில், பணி நேரத்தில் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் மீது உடனடி சஸ்பெண்ட் உட்படக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT