குறையும் முதலீடுகள்.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்!
பணிநீக்க அறிவிப்புகள், குறையும் முதலீடுகள் மற்றும் சிலிக்கான் வேலி வங்கியின் திவால் என தொடர்ந்து ஸ்டார்ட்அப்களுக்கு மோசமான செய்திகளாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்டார்ட்அப்களுக்கு இன்னும் கடினமான சவால்கள் காத்துக் கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருவதால், ஸ்டார்அப் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்குப் போதிய பணமின்றி தவித்து வருகின்றன. இதன் காரணமாக, டவுன் ரவுண்டு ஃபண்டிங்கை (Down Round Funding) ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. இனி வரும் நாட்களில் டவுன் ரவுண்டு ஃபண்டிங்குகள் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறார்கள்.
'டவுன் ரவுண்டு ஃபண்டிங்' என்றால் என்ன?
ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மதிப்பீடு குறைந்து, அதற்கேற்றார்போல அதன் பங்குகளின் மீதான முதலீட்டு மதிப்பும் குறைவதே டவுன் ரவுண்டு ஃபண்டிங் எனப்படுகிறது. 2021-ல் 100 மில்லியன் டாலர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட நிறுவனத்தில் ஒரு பகுதி பங்குகளுக்கு 10 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படுகிறது என வைத்துக் கொள்வோம். தற்போது, அதே குறிப்பிட்ட பங்குகளுக்கு அந்நிறுவனத்தை 50 மில்லியன் டாலர்கள் அளவுக்கு மட்டுமே மதிப்பீடு செய்து, 5 மில்லியன் டாலர்கள் மட்டுமே முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வருவார்கள். பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தப் பிரச்சினையையே தற்போது சந்தித்து வருகின்றன. 2023-ன் பிற்பகுதியில் இது இன்னும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஒவ்வொரு $3-க்கும், $1 மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது.