
தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகை தரவுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு அவர் வருகை தருவதையடுத்து, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வரும் 18ம் தேதியன்று திரவுபதி முர்மு அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வருகிறார்.
இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
அதன் பின்னர் அவர் விமானம் மார்க்கமாக அங்கிருந்து கோவைக்கு செல்கிறார்.
இதனையடுத்து அவர் கோவை ஈஷா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
காவல்துறை அதிகாரி தகவல்
ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதி வருகை குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், டெல்லியில் இருந்து ஜனாதிபதி தமிழகம் வருகிறார் என்று அண்மையில் தகவல்கள் தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தகவல் வெளியாகியிருந்தாலும் அவர் வருகை குறித்த உறுதியான தகவல் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் தெரிய வரும்.
எனினும், நாங்கள் இப்பொது இருந்தே பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.