தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்
தமிழகத்தில் அவ்வபோது சில வித்தியாசமான செய்தி தென்படும். இன்றைய காலகட்டத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி என்பது மிகவும் சாதாரணமான ஓர் நிகழ்வு தான். எல்லா நாடுகளிலும் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். தாயாய் மறு ரூபம் எடுக்கப்போவதால் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, பரிசுகளும் அந்த பெண்ணுக்கு வழங்கப்படும். ஆனால் இதில் இருந்து வேறுபடும் இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சங்கராபுரம் மேலப்பட்டு கிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை மேலகங்கேஸ்வரர் கோயில் மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பசு மாடு ஒன்று அம்சவேணி என பெயரிடப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பசு கருவுற்றுள்ளது.
500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பசு மாட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி
அந்த பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவுசெய்துள்ளனர். இதனையடுத்து யாகவேள்வி பூஜையுடன் பசுமாட்டுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியானது துவங்கியது. இதனையொட்டி பொதுமக்கள் வளையல் தட்டுகள், சீர்வரிசை தட்டுகள் ஆகியவற்றுடன் கோயிலுக்குள் வந்தனர். அதன்பின்னர் கோயில் கோமாதாவிற்கு மாலை அணிவிக்கப்பட்டு, யாகவேள்வி பூஜை நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து, மாட்டின் காலில் சலங்கை கட்டி, கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிறு மற்றும் கொம்புகளில் வளையல்களை அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், குழந்தை இல்லா தம்பதிகள் பங்கேற்று மாட்டிற்கு வளையல் அணிவித்து, மஞ்சள் பூசி வணங்கிசென்றனர். பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்தப்பட்டது குறித்து அறிந்த சுற்றுவட்டார மக்கள் ஆர்வத்துடன் இங்குவந்து பசுவை கண்டு நெகிழ்ச்சி அடைந்து செல்கிறார்கள்.