சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்
திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை இப்போது பார்க்கலாம். 2014ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் சீமென்ஸ் செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் கிளஸ்டர்கள் நிறுவப்படும் என்று ஒரு அரசாணை வெளியிடபட்டது. இந்த திட்டத்திற்கு 3,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த 3,300 கோடி ரூபாயில் 90% மானியத்தை தொழில்நுட்பக் கூட்டாளிகளான சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் ஆகிய நிறுவனங்கள் வழங்கின. ஆந்திர அரசாங்கம் 10% மட்டுமே மானியம் வழங்கியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும்(MoU) அந்த வருடமே கையெழுத்தானது.
விதிகளுக்கு புறம்பாக நிறுவப்பட்ட ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகம்
ஆனால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் ஆகிய நிறுவனங்கள் வழங்கிய 90% பங்களிப்பு எங்குமே குறிப்பிடப்படவில்லை. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சந்திரபாபு நாயுடுவும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் கே.அச்சன் நாயுடுவும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் அப்போதைய அமைச்சர் கந்தா ஸ்ரீநிவாஸ் ராவுக்கும் தொடர்பு இருப்பதாக சிஐடி கூறியுள்ளது. மேலும், அமைச்சர்கள் குழுவிற்கு தெரியாமல், விதிகளுக்கு புறம்பாக ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகம் அப்போது உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரூ.371 கோடி எப்படி மோசடி செய்யப்பட்டது?
"அப்போதைய ஆந்திரப் பிரதேச அரசு ரூ.371 கோடியை இந்த திட்டத்திற்காக எடுத்திருக்கிறது. ஆனால், அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே சிறப்பு மையங்களை நிறுவ பயன்படுத்தப்பட்டது" என்று சிஐடி தலைவர் என் சஞ்சய் கூறியுள்ளார். மீதமிருந்த தொகைகள் ஷெல் நிறுவனங்கள் மற்றும் போலி விலைப்பட்டியல் மூலம் வேறுவிதமாக திருப்பிவிடப்பட்டு மோசடி நடந்திருக்கிறது. மேலும், விசாரணையின் போது விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருப்பது போலியான முகவரிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
'இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளியும், முக்கிய சதிகாரரும் சந்திரபாபு நாயுடு தான்'
இந்த நிதி மோசடியின் பின்னணியில் சந்திரபாபு நாயுடுவும் மற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் இருப்பதாக சிஐடி தலைவர் என் சஞ்சய் கூறியுள்ளார். "ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களிடம் இருந்து விசாரணை தொடங்கப்பட்டாலும், ஷெல் நிறுவனங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதியை மாற்றியதைத் திட்டமிட்டவரும், இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளியும், முக்கிய சதிகாரரும் சந்திரபாபு நாயுடு தான்." என்று என் சஞ்சய் கூறியுள்ளார். திறன் மேம்பாட்டுக் கழகம் டிசைன் டெக்கிற்கு செலுத்திய ரூ. 371 கோடியில் ரூ. 58.8 கோடியை மட்டுமே சீமென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ.241 கோடியை கூட்டு மோசடி செய்த நிறுவனங்கள்
அப்போது சீமென்ஸ் நிறுவனத்தின் எம்.டியாக இருந்த சுமன் போஸ் மற்றும் டிசைன் டெக் எம்.டி கான்வில்கர் ஆகியோர் ரூ.241 கோடியை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. ஹவாலா சேனல்கள் மூலம் இந்த தொகைகள் ஹைதராபாத் மற்றும் புனேவுக்கு அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்கில்லர் எண்டர்பிரைசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் முன்னாள் நிதி ஆலோசகர் போஸ், கான்வில்கர், முகுல் சந்திர அகர்வால் மற்றும் பட்டய கணக்காளரான சுரேஷ் கோயல் ஆகியோரை இந்த ஆண்டு தொடக்கத்தில், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்தது. டிசைன் டெக் நிறுவனத்திற்கு சொந்தமான ₹ 31.2 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் ED தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.