LOADING...
ஜல்லிக்கட்டு 2026 ஆரம்பம்! தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த 600 காளைகள்; மாடுபிடி வீரர்களுக்குப் பரிசு மழை!
தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு 2026 ஆரம்பம்! தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த 600 காளைகள்; மாடுபிடி வீரர்களுக்குப் பரிசு மழை!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
04:12 pm

செய்தி முன்னோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 3) கோலாகலமாகத் தொடங்கியது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவையொட்டி, இங்குள்ள புனித விண்ணேற்பு அன்னை பேராலயம் அருகே ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற போட்டியில் தஞ்சை, சிவகங்கை, திருச்சி, மதுரை மற்றும் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600 காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைகளை அடக்குவதற்காக சுமார் 300 வீரர்கள் களமிறங்கினர். மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாநில அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பரிசுகள்

வீரமும் பரிசுகளும்

வாடிவாசல் வழியாக முதலில் 10 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாகப் பாய்ந்து வந்தன. சில காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி வீரர்களுக்குச் சவாலாக அமைந்தன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பைக்குகள், கட்டில்கள், பீரோக்கள், குக்கர்கள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் எனப் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக அரசு விதித்துள்ள வழிகாட்டல் நெறிமுறைகளின்படி இந்தப் போட்டி நடைபெற்றது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி என்பதால், புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஆக்ரோஷமான காளைகளின் பாய்ச்சலை உற்சாகத்துடன் ரசித்தனர்.

Advertisement