LOADING...
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! 12 மாநகராட்சிகளில் தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து
தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! 12 மாநகராட்சிகளில் தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2026
01:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் தனியாருக்கு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயக் கோரப்பட்டிருந்த டெண்டரைத் தமிழக அரசு தற்பொழுது ரத்து செய்துள்ளது. திடக்கழிவுகளை சேகரித்தல் மற்றும் கொண்டு செல்லுதல் தொடர்பான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கும், பரிவர்த்தனை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கும் ஆலோசனை நிறுவனங்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

12 மாநகராட்சிகள்

12 மாநகராட்சிகளில் தனியார்மயமாக்கத் திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம், தமிழகத் திட்ட மேம்பாட்டு மானிய நிதியின் சார்பில் இந்த முன்மொழிவுக்கான அழைப்பு கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் உள்ள தூய்மைப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ள விளம்பரம் வெளியானது. மொத்தமுள்ள பணிகளை மூன்று தொகுப்புகளாகப் பிரித்து, ஒரு தொகுப்பிற்கு 1.35 கோடி ரூபாய் மதிப்பில் இந்த டெண்டர் கோரப்பட்டிருந்தது.

கடும் எதிர்ப்பு

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும், தினக்கூலிப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளிலும் பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்தத் தனியார்மய முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என அரசுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர்.

Advertisement

டெண்டர் ரத்து

பணிந்தது அரசு

அரசியல் கட்சிகள் மற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாகத் தற்பொழுது இந்த ஆலோசனை நிறுவனங்களை நியமிக்கும் டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையில் பல ஆண்டுகளாகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் வேலைப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அரசின் இந்த டெண்டர் ரத்து நடவடிக்கை பணியாளர்கள் மத்தியில் தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி என்பது அத்தியாவசியமானது என்பதால், இதனைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என்பதில் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளன.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement