நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
நாகரிகமும் சமூகமும் வளர்ச்சியடைவதில் கோவில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனால், கோவில்களைப் பாதுகாத்து அதன் புனித தன்மையைக் காப்பது நமது முதன்மையான கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
கோவில்கள் காலத்தின் சோதனைகளை எல்லாம் தாங்கி நிற்பதால் அவை தொல்லியல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்கவை. திருவிழா நேரங்களில் கோவிலின் புனிதத்தைப் பேணி, பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் போது கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கக்கூடாது என்று கோவில் நிர்வாகம் உறுதியளித்தது பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம்
திருச்செந்தூர் கந்த சஷ்டி தொடர்பான வழக்கு
பொதுவாக, ஐப்பசி ஆறாம் நாளிலிருந்து ஆறு நாட்கள் நடக்கும் கந்த சஷ்டி திருவிழாவின் போது, பக்தர்கள் விரதம் இருந்து, 'கந்த சஷ்டி கவசம்' பாடி, வீட்டிற்கு செல்லாமல் கோவிலில் வழிபாடு நடத்துவார்கள்.
இது போன்ற நேரங்களில், பக்தர்கள் பொதுவாக கோவிலின் வெளிப்புற பிரகாரத்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தது. ஆனால், இந்த வருடம் கோவில் நிர்வாகம் இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட தீர்ப்பை வழங்கி, "கோவிலை பேணி காப்பதுடன் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகமங்களின் பொறுப்பு"என்றும் தெரிவித்துள்ளனர்.