பாகனை மிதித்து கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப திட்டம்
நேற்று திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானை நேற்று திடீரென இரு நபர்களை தாக்கியதன் பின்னணியும் தற்போது வெளியாகியுள்ளது.
நோ மீன்ஸ் நோ..அது யானைக்கும் பொருந்தும்!
நேற்று பிற்பகல், கோவிலின் யானை மண்டபத்திற்கு சென்ற பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினரான சிசுபாலன் யானைக்கு பழங்களை வழங்கியுள்ளனர். அப்போது சிசுபாலன் யானையை தொட்டு செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளார். தனக்கு பழக்கம் இல்லாதவர்களை தொட யானை அனுமதிக்காது என்றும், தொடர்ச்சியாக சிசுபாலன் தன்னை தொடுவதால் எரிச்சலுற்ற யானை அவரை தாக்கியுள்ளது. காப்பாற்ற வந்த உதயகுமாரையும் தாக்கி உள்ளது. பின்னரே அது தன்னுடைய பாகன் என அறிந்த யானை அவரை எழுப்ப முயன்றுள்ளது. ஆனால் சம்பவ இடத்திலேயே உதயகுமார் இறந்ததை அறிந்த யானை மேலும் ஆத்திரமடைந்து மறுபடியும் சிசுபாலனை தாக்கியதாக கூறுகின்றனர் நேரில் கண்டவர்கள்.
வழக்கு பதிந்த காவல்துறையினர்
இச்சம்பவம் குறித்து, திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்திற்குப் பின்னர், யானையை கண்காணிக்கப்பட்டு வருகிறது, மேலும் பக்தர்கள் அதன் அருகே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் மேற்பார்வையில் கோவில் யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவதற்கான ஆலோசனை வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலர், பொதுவாக, ஆண் யானைகளுக்கு மட்டுமே மதம் பிடிப்பதுண்டு எனவும், இது ஒரு பெண் யானையாக இருப்பதால், யானைக்கு மதம் பிடிக்கவில்லை எனவும், அது தூண்டப்பட்டதால் ஏற்பட்ட தாக்குதல் எனவும் கூறினார்.