
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வரும் 28 முதல் 30 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கைபடி, தென்னிந்திய பகுதிகளின் மேல், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். எனினும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பம்
அதிகரிக்கும் வெப்பம்
வளிமண்டல சுழற்சி காரணமாக. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் 28 முதல் 30 ஆம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் 5 நாட்கள் வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு தாண்டி 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.