தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம்
செய்தி முன்னோட்டம்
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசக்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
திறன் மேம்பாட்டத்துறையில் சந்திரபாபு நாயுடு ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தநிலையில் ஆந்திர மாநில சிஐடி போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய சிஐடி போலீசார் அதிகாலை 3.30 மணியளவில் ஆந்திர-நந்தியாலாவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால், நள்ளிரவில் கைது செய்ய கூடாது என்று கூறி, தெலுங்கு தேச கட்சியினர் போலீசாரை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சந்திரபாபு நாயுடு காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புகளோடு விஜயவாடாவிற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து இவரின் கைது நடவடிக்கைக்கு எதிராக தெலுங்குத்தேசக்கட்சியினர் போராட்டம் செய்ய துவங்கியுள்ளனர்.
கைது
போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கைது
மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டயர்களை எரித்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும், சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டப்பிரிவு 120பி-குற்றச்சதி, 420-நேர்மையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, 465-போலி செய்தல் உள்ளிட்ட ஐபிசி பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர் கூறுகையில், "அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதால் சிஐடி அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர"என்றும்,
"ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளோம் என்று கூறியுள்ளார்" என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.