தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்து: மீட்பு பணியில் சிக்கல் என்கிறார் அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் நிலைமை 'மோசமாக இருக்கிறது' என்றும், நீர் வரத்து மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் தெலுங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதனால் மீட்பு பணி மேலும் தொய்வடைந்துள்ளதாக தெரிகிறது.
"சுரங்கப்பாதையில் இயற்கையான பாறைகள் தளர்வானதால், திடீரென தண்ணீர் மற்றும் சேறு உள்வந்து, சுரங்கப்பாதையில் சுமார் 12-13 அடி வரை நிரம்பியது. இது மிகவும் சவாலான சூழ்நிலை, மேலும் நெருக்கடியைத் தீர்க்க தொழில்நுட்ப வல்லுநர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்," என்று அமைச்சர் விளக்கினார்.
மீட்பு பணிகள்
தண்ணீர் கசிவை வெளியேற்றவும், சிக்கியவர்களுக்கு பிராணவாயு அனுப்பும் பணியும் தீவிரம்
"தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றவும், சுரங்கப்பாதையில் ஆக்ஸிஜனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையில் உள்ள சேறு மேடுகளை அகற்றி, விபத்து நடந்த இடத்தை அடைய மாற்று வழிகளை ஆய்வு செய்து வருகின்றனர்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிக்கியுள்ள தொழிலாளர்களில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார் (திட்டப் பொறியாளர்), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (களப் பொறியாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த சந்தீப் சாஹு (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த ஜடக்ஸ் (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த சந்தோஷ் சாஹு (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த அனுஜ் சாஹு (தொழிலாளர்), ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த சன்னி சிங் (தொழிலாளர்) மற்றும் பஞ்சாபை சேர்ந்த குர்பிரீத் சிங் (தொழிலாளர்) ஆகியோர் அடங்குவர்.