தெலங்கானா வெள்ள மீட்புப் பணியில் கொடூரம்: 2 படகுகள் கவிழ்ந்து 11 SDRF & தீயணைப்பு வீரர்கள் மாயம்
செய்தி முன்னோட்டம்
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள பேதுபள்ளி ஏரி வெள்ளத்தால் நிரம்பி வழிந்த நிலையில், அங்கு சிக்கிய மீனவர்களை மீட்கச் சென்ற மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 11 வீரர்கள், அவர்கள் பயணித்த 2 மீட்புப் படகுகள் கவிழ்ந்து நீரில மூழ்கி மாயமாகியுள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது. மாயமான வீரர்களைத் தேடும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையும் (NDRF) ட்ரோன்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
விவரம்
சம்பவம் நடந்தது எப்படி?
பேதுபள்ளி ஏரியில் சென்ற 5 மீனவர்கள், கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்தனர்.
அவர்களை மீட்க முதலில் 3 தீயணைப்பு வீரர்கள் ஒரு படகில் சென்றனர்.
ஆனால், அப்படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வீரர்கள் ஏரியின் நடுவே சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து 6 SDRF வீரர்கள், கூடுதல் 4 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் அடங்கிய குழு 2 பெரிய படகுகளில் மீட்புப் பணியைத் தொடங்கியது.
இக்குழுவினர் முதலில் சிக்கிய 3 தீயணைப்பு வீரர்களை பாதுகாப்பாக மீட்டு அனுப்பினர்.
பின்னர், மீனவர்களை நோக்கிச் சென்றபோது, ஏரியின் கொந்தளிப்பான வெள்ள நீரோட்டத்தில் சிக்கி 2 மீட்புப் படகுகளும் கவிழ்ந்தன.
இதில் 11 வீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
தேடுதல்
ட்ரோன்கள் & NDRF மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை
சம்பவ இடத்திற்கு உடனடியாக கம்மம் மாவட்ட ஆட்சியர் திவாகர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ மட்டா ரகமயி சென்று மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
பத்ராச்சலத்திலிருந்து NDRF படைகள் அவசரமாக அழைக்கப்பட்டுத் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் தவிப்பவர்களுக்கு லைஃப் ஜாக்கெட்டுகளை வான்வழியாக வீச ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டத் தகவலின்படி, ஏரியில் சிக்கிய 5 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான 11 வீரர்களைத் தேடும் பணிகளே முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணி
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவு
இச்சம்பவம் குறித்துத் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாயமான SDRF மற்றும் தீயணைப்பு வீரர்களைப் பாதுகாப்பாக மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் சஞ்சய் ஜாஜு மீட்புப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீனிவாசரெட்டி நிலைமையை நேரில் ஆய்வு செய்ய வியாழக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு வருகை தருகிறார்.