ISI வலையில் சிக்கிய 15 வயது பஞ்சாப் சிறுவன்; மேலும் பல சிறார்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம்
செய்தி முன்னோட்டம்
இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பை சீர்குலைக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பு புதிய சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளது. பஞ்சாப்பில் 15 வயது சிறுவன் ஒருவன் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இது பாதுகாப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதான்கோட் SSP தல்ஜிந்தர் சிங் தில்லான் கூறுகையில், "இந்தச் சிறுவன் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் நீண்ட நாட்களாகத் தொடர்பில் இருந்துள்ளான். இவனைப் போலவே பஞ்சாப்பின் மற்ற மாவட்டங்களிலும் சில சிறுவர்கள் ஐ.எஸ்.ஐ வலையில் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
உளவு
மேலும் பல சிறார்கள் இந்த வலையில் சிக்கியுள்ளதாக தகவல்
விசாரணையில் அச்சிறுவன் குறித்தான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடகங்கள் வழியாக பாகிஸ்தான் கையாளுபவர்கள் (Handlers) சிறுவனுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். அச்சிறுவனின் தந்தை கொலை செய்யப்பட்டுவிட்டதாக கூறி, அவனை மனரீதியாகப் பாதிப்படையச் செய்து, பாகிஸ்தான் அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. இந்திய ராணுவத் தளங்கள் மற்றும் முக்கியப் பாதுகாப்பு இடங்களின் வீடியோக்களை தனது செல்போன் மூலம் பாகிஸ்தானுக்குச் சிறுவன் பகிர்ந்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இந்தியச் சிறுவர்களைக் குறிவைத்து பாகிஸ்தான் உளவு அமைப்புகள் செயல்படுவதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.