Loading...
சபரிமலை பக்தர்களுக்கு ₹2 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு: வீடு திரும்பிய 3 நாட்களுக்குள் உயிரிழந்தாலும் இழப்பீடு கிடைக்கும்
சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு

சபரிமலை பக்தர்களுக்கு ₹2 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு: வீடு திரும்பிய 3 நாட்களுக்குள் உயிரிழந்தாலும் இழப்பீடு கிடைக்கும்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
09:00 am

செய்தி முன்னோட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முதன்முறையாக ₹2 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்திற்கான முழுப் பிரீமியம் தொகையையும் தேவசம் போர்டே ஏற்கும் எனத் தலைவர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுவரை சபரிமலை யாத்திரையின்போது விபத்துக் காப்பீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயுள் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்ஐசி) இணைந்து மெய்நிகர் வரிசை மற்றும் உடனடி முன்பதிவு பக்தர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

காப்பீட்டுத் தொகை

பக்தர் வீடு திரும்பிய பிறகு 3 நாட்களுக்குள் உயிரிழந்தாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்

சபரிமலை யாத்திரை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு முதல் யாத்திரைக்குப் பின் மூன்று நாட்கள் வரை இந்தக் காப்பீடு செல்லுபடியாகும்.

குறிப்பிட்ட இந்தக் காலக்கெடுவிற்குள் பக்தர் தனது வீட்டிற்குத் திரும்பிய பிறகு உயிரிழந்தாலும் காப்பீட்டுத் தொகையைக் கோர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்பதிவு இன்றி வரும் பக்தர்கள் உயிரிழந்தாலும் அவர்கள் உண்மையான பக்தர் என போர்டு சான்றளித்தால் எல்ஐசி இழப்பீடு வழங்கும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பாலிசி நடைமுறைகள் எல்ஐசி நிறுவனத்துடன் இணைந்து இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

அஞ்சல் துறை

அஞ்சல் துறை மூலம் அரவணைப் பிரசாதம் பார்சல் சேவை மற்றும் ₹4.5 கோடியில் ஏஐ பார்க்கிங்

பக்தர்களின் வசதிக்காக அஞ்சல் துறையுடன் இணைந்து சபரிமலையில் அரவணைப் பிரசாதம் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் அஞ்சல் கவுண்டரில் தொகையை செலுத்தி முகவரியைக் கொடுத்தால் சிறிய சேவைக் கட்டணத்துடன் வீடுகளுக்கே பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

அதேபோல் நிலக்கல்லில் உள்ள 22 பார்க்கிங் பகுதிகளை 11 மண்டலங்களாக ஒருங்கிணைத்து ₹4.5 கோடி செலவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பார்க்கிங் அமைக்கப்படுகிறது.

நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வாகன இயக்கத்தைக் கண்காணிப்பதோடு சக்குபாலத்தில் கூடுதலாக 400 கார்கள் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாதுகாப்பு ஏற்பாடுகள்

எல்இடி விளக்குகள், அப்பாச்சிமேடு ஓய்வு மையம் மற்றும் எருமேலி பாதை பாதுகாப்பு ஏற்பாடுகள்

மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் போக்குவரத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

டாக்ஸிகள் சக்குபாலம் பார்க்கிங் பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சாலக்கயம் முதல் பம்பை வரை நிரந்தர எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்பாச்சிமேடு ஓய்வு மையம் தரை ஓடுகள் மற்றும் புதிய விளக்குகளுடன் புதுப்பிக்கப்பட்டுப் பக்தர்கள் ஓய்வெடுக்கத் தயாராக உள்ளது.

மேலும் நிகழ்நேரத் தகவல்களை வழங்கும் திருவிழா கட்டுப்பாட்டு அறையும் எருமேலி பாதையில் வழிகாட்டிப் பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT