
டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிருத்திவாசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாத் தன்னுடைய சிஇஓ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த மார்ச் மாதம் கிருத்திவாசனை சிஇஓ-டெஸிக்னேட்டாக அறிவித்திருந்தது டிசிஎஸ்.
அதனைத் தொடர்ந்து, டிசிஎஸ்ஸின் 50 ஆண்டு காலப்பயணத்தில் இன்று அந்நிறுவனத்தின் 5-வது தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் கிருத்திவாசன்.
இதற்கு முன்னதாக டிசிஎஸ் நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு வணிகக் குழுவின உலகளாவிய தலைவராக செயல்பட்டு வந்திருக்கிறார் கிருத்திவாசன். மேலும், இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
கிருத்திவாசன் யார்?
இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் இளங்கலைப் பட்டமும், கான்பூர் ஐஐடியில் தொழிற்துறை மற்றும் மேலாண்மை துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
1989-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் இணைந்த கிருத்திவாசன், அந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் தலைமைப் பதவியை வகித்திருக்கிறார்.
டிசிஎஸ் நிறுவனத்தில் விநியோகம், வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, திட்ட மேலாண்மை மற்றும் விற்பனை எனப் பல துறைகளில் அனுபவம் பெற்றவர் கிருத்திவாசன்.
டிசிஎஸ் இபீரோஅமெரிக்கா மற்றும் டிசிஎஸ் அயர்லாந்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். மேலும், டிசிஎஸ் டெக்னாலஜி சொல்யூஷன் AG-யின் மேற்பார்வைக் குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார்.
முன்னாள் சிஇஓ-வான ராஜேஷ் கோபிநாத், தன்னுடைய பொறுப்புகளை புதிய சிஇஓ-விடம் ஒப்படைப்பதற்காக செப்டம்பர் 15-ம் தேதி வரை பணியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.