ஐடி நிறுவனத்திற்குள் ரகசியமாக வேலை பார்த்த பெண் போலீசார்! ஸ்கெட்ச் போட்டு TCS ஊழியர்களை தூக்கிய பின்னணி
செய்தி முன்னோட்டம்
நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய விவகாரத்தில், மகாராஷ்டிர காவல்துறை ஒரு சினிமா பாணி அதிரடி விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்தப் புகார்களின் உண்மைத்தன்மையை அறிய ஆறு பெண் போலீஸ் அதிகாரிகள் சுமார் 40 நாட்கள் அந்த அலுவலகத்திற்குள்ளேயே ரகசியமாக பணியாற்றி ஆதாரங்களை திரட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த 40 நாள் ரகசிய ஆபரேஷன் மூலம் திரட்டப்பட்ட சாட்சியங்கள், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உளவு
ரகசிய உளவாளிகளாக 40 நாட்கள்
பிப்ரவரி மாத நடுப்பகுதியிலிருந்து, BPO ஊழியர்களை போல தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஆறு பெண் போலீசார், அந்த அலுவலகத்திற்குள் ஊடுருவினர். மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் கர்னிக் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த 'அண்டர்கவர்' ஆபரேஷனில், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களின் அன்றாட செயல்பாடுகள், அவர்களின் பேச்சுவார்த்தைகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை மிக நெருக்கமாகக் கண்காணித்தனர். ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பிறகு, உயர் அதிகாரிகளிடம் ரகசியமாக தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
கைது
புகாரும் அதிரடி கைதுகளும்
இந்த விவகாரம் முதன்முதலில் மார்ச் 26 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு பெண் ஊழியர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடர்ந்து, மேலும் எட்டு ஊழியர்கள் பாலியல் தொல்லைகள் குறித்துப் புகார் அளித்தனர். மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை மொத்தம் எட்டு எஃப்.ஐ.ஆர்கள் (FIR) பதிவு செய்யப்பட்டன. ரகசிய போலீசார் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண் HR மேலாளரும் அடங்குவார். பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய புகார் மின்னஞ்சல் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஆய்வு
சிறப்பு விசாரணைக் குழுவின் ஆய்வு
இந்த வழக்கினை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு (SIT), நிறுவனத்தின் உள்முறைப் பாதுகாப்பு வழிமுறைகளையும் ஆய்வு செய்து வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தில் 'போஷ்' (POSH) சட்டத்தின் கீழ் புகார் குழுக்கள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் ஏன் அந்த அமைப்பைப் பயன்படுத்தவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, பின்தொடர்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
நடவடிக்கை
டிசிஎஸ் நிறுவனத்தின் கடும் நடவடிக்கை
இந்தச் சம்பவங்களை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிறுவனம், "ஊழியர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இந்தப் புகார்கள் குறித்துத் தெரிந்த உடனேயே கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி விசாரணை முறை, ஐடி துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.