
ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்!
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் 4G வலைப்பின்னலை அமைப்பதற்கான BSNL-ன் ஒப்பந்தத்தை கைப்பற்றியிருக்கிறது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பு.
ரூ.15,000 கோடிக்கு மேல் மதிப்பிடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருப்பதாக பங்குச்சந்தை தாக்கலின் போது தெரிவித்திருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்.
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தேஜஸ் நெட்வொர்க், இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்திய தொலைபேசி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் C-DOT அமைப்பு ஆகிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் 4G வசதிகள் அளிக்கப்படாத தொலைவில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் 4G வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது BSNL.
டாடா
புதுப்பிக்கப்படும் BSNL:
BSNL நிறுவனத்தை புதுப்பிக்க ரூ.1.64 லட்சம் கோடிக்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு. இதில் ரூ.43,964 கோடி நிதியுதவியாகவும், ரூ.1.20 லட்சம் கோடிக்கு நிதியல்லாத பிற உதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது டிசிஎஸ்ஸூடன் செய்யப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தமும் அதன் ஒரு பகுதியாகவே பார்க்ப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா முழுவதும் 100,000 4G டவர்கள் அமைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24,600 4G டவர்களை 4G வசதியே இல்லாத இடங்களில் அமைக்கவிருப்பதாக கடந்த வாரமே அறிவித்திருந்தது இந்திய தொலைதொடர்புத் துறை. மேலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 4G வசதிகள் இல்லாத கிராமங்களில் கூட 4G வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.