பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிபிசி, தன் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலின் மூலம், அதன் ஒளிபரப்புத் துறையைத் தவிர மற்ற அனைவரையும் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி வலியுறுத்தி உள்ளது. "தனிப்பட்ட வருமானம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டால், பணியாளர்கள் பதிலளிப்பதைத் தவிர்க்கலாம். சம்பளம் தொடர்பான பிற கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்" என்று பிபிசி அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.
இரவு 10.30 மணிக்கு பின்னும் நடந்த வருமான வரித்துறை 'ஆய்வு'
இது குறித்து கேள்வி எழுப்பிய போது, "ஆய்வு நடந்து கொண்டிருப்பது தெரியும்" ஆனால் அதை பற்றி கருத்து கூறும் நிலையில் நாங்கள் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இங்கிலாந்து இது குறித்து அதிகாரப்பூர்வமான பதில் எதையும் வெளியிடவில்லை. நேற்று(பிப் 14) காலை "ஆய்வை" தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று கணக்குகளில் கவனம் செலுத்துவார்கள் என்றும் பிபிசியின் மூத்த நிர்வாகத்திடம் கேள்வி கேட்பார்கள் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று இரவு 10.30 மணிக்கு ட்வீட் செய்திருந்த பிபிசி செய்தி நிறுவனம், இன்னும் வருமான வரித்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தில் தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தது.