இந்தியாவில் வருமான வரி வசூலில் தமிழகத்திற்கு 4-ம் இடம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24-ம் நாள் வருமான வரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களிடம் வருமான வரி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் தாங்களாக முன்வந்து நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரி செலுத்துவதை ஊக்குவிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 1860-ம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவர் இந்தியாவில் முதன் முறைாக வருமான வரியை அறிமுகப்படுத்தினார். எனவே, அந்த நாளையே வருமான வரி தினமாகத் தேர்ந்தெடுத்து 2010-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றைய 164-வது வருமான வரி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரி அலுவலகம் சார்பிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்திற்கான மேம்படுத்தப்பட்ட வருமான வரி இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் வருமான வரி வசூலில் 4-வது இடத்தில் இருக்கும் தமிழகம்:
இந்த விழாவில் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர், வருமான வரி ஆணையர்கள் ஜெயந்தி கிருஷ்ணன், டி.என்.கார் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். விழாவில் பேசிய சுனில் மாத்தூர், "இந்தியாவில் 1922-ம் ஆண்டு முதல் முறையாக வருமான வரித்துறை உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1961-ல் வருமான வரிச் சட்டங்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1995-96ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வரி வசூல் ரூ.35,000 கோடியாக இருந்து. அப்போது இருந்து ஒவ்வொகு ஆண்டும் வரி வசூலானது அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. கடந்த நிதியாண்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் ரூ.1.08 லட்சம் கோடி வரி வசூலாகியிருக்கிறது. இத்துடன் வரிவசூலில் நான்காம் இடத்தில் இருக்கிறது தமிழகம் மற்றும் புதுச்சேரி" எனப் பேசியிருக்கிறார்.