LOADING...
அரபிக்கடல் புயலால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
அரபிக்கடல் புயலால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடல் புயலால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2025
05:35 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) வெளியிட்ட அறிக்கையில், வடமேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த சக்தி தீவிர புயலின் தாக்கம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு (அக்டோபர் 9 வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த சக்தி தீவிர புயல் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தென் இந்தியப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மாவட்டங்கள்

மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

அக்டோபர் 5 அன்று கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 6 அன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அக்டோபர் 7 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 8 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்கள்

மீனவர்களுக்காக எச்சரிக்கை

அக்டோபர் 9 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தக் காலகட்டத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையின்படி, மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 90 முதல் 120 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.