தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது - சபாநயாகர் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரானது வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி துவங்கும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சட்டப்பேரவை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டப கூட்டரங்கில் காலை 10 மணியளவில் துவங்கும். இந்த கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அந்நாளில் நடக்கவுள்ள அலுவல் ஆய்வு கூட்டத்தின் பொழுது முடிவெடுக்கப்படவுள்ளது" என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், தமிழக சட்டப்பேரவையிலும் அதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், 2023-24ம் ஆண்டின் கூடுதல் செலவீனங்களுக்கான மானிய கோரிக்கைகளை நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.