
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் எந்தப் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது என்பதே முதலமைச்சரின் உறுதியான கொள்கை என்று அவர் கூறினார். சமீபத்திய அறிக்கைகளின்படி, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA), ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது.
எதிர்ப்பு
விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
இந்த அனுமதி, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த 2020 சட்டத்தின் வரம்புக்கு வெளியே உள்ள பகுதியாகக் கருதப்பட்டாலும், இது விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த அனுமதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்றன. இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த அறிவிப்பு, அரசின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
உத்தரவு
அனுமதியை திரும்பப் பெற உத்தரவு
தற்போது மட்டுமல்லாது எதிர்காலத்திலும் கூட தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெறவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.