சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு
தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம், அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் செயல்பாடுகள், உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறையினர் ஆகியோருடனான மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான மாநாடு குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதற்கான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் அக்டோபர் மாதம் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்களும், அரசு உயர் அலுவலர்களும் கலந்துக்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை
அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்த 2 நாள் மாநாட்டில், சட்ட ஒழுங்கு மற்றும் மாவட்ட நிர்வாகம் குறித்த ஆய்வினை முதல்வர் மிக தீவிரமாக மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. திமுக ஆட்சி துவங்கி கடந்த 2 ஆண்டுகளில் பல நல திட்டங்கள் மாநில மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் மற்றும் நிறை-குறைகள் குறித்தும் அவர் தெரிந்துக்கொண்டு அதற்கான அறிவுரைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இந்த மாநாட்டில் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் கூறப்பபட்டுள்ளது.