"இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று இருமுறை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்காத நிலையில், இன்று இது குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அமலாக்கத்துறையினர் மூலமா தரப்படும் அநியாயமான தொல்லைகள் எல்லாம், அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என யாருக்கும் கொஞ்சமும் சந்தேகம் இல்ல" "10 ஆண்டுக்கு முன்னாடி உள்ள பழைய புகாரை வெச்சு, 18 மணிநேரம் அடைச்சு வெச்சு, அவருக்கு தொல்லை தர அளவிற்கு அப்படி என்ன எமெர்ஜென்சி நிலைமை இப்போ? அவர் பொது வெளியில் தினமும் வருபவர். தினமும் மக்களை சந்திப்பவர். ஓடி ஒளிபவர் அல்ல", எனக்கூறியுள்ளார் முதல்வர்.
மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் முதல்வர் ஸ்டாலின்
"அவர்(அமைச்சர் செந்தில் பாலாஜி) உயிருக்கு ஆபத்தான நிலையில், தாங்க முடியாத நெஞ்சுவலி ஏற்பட்ட பிறகுதான், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்" "மக்களுக்கான அரசியலை செஞ்சாதான் மக்கள் பா.ஜ.க கட்சியை நம்புவாங்க. பா.ஜ.க அரசியல், மக்கள் விரோத அரசியல் தான்" "கருத்தியல் ரீதியா, அரசியல் ரீதியா, தேர்தல் காலத்தில் எதிர்கொள்ள முடியாம, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை,CBI என மிரட்டுறது தான் அவங்க பாணி. இந்த ஜனநாயகத்திற்கு எதிரான பாணியை தான், இந்தியா முழுவதும் அவங்க follow பண்றங்க" 'தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!' என தலைப்பிட்டு அந்த வீடியோ பதிவை முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.