மெட்ரோ பணிகளை நிறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் வரையில், சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மின்வாரிய பணிகளை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகரில் தற்போது மழைக்கால வெள்ளத்தடுப்பிற்காக குழாய்கள் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், புதிதாக பள்ளம் தோண்ட கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மக்கள் பெரிதளவில் பாதிக்கப்படாத வகையில் வடகிழக்கு பருவமழை காலங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதேப்போல் இந்தாண்டும் நாம் அதனை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தல்
மேலும் அவர், இதுபோன்ற பள்ளங்கள் தோண்டுவதால் மட்டுமல்ல, மோசமான சாலைகள் காரணமாகவும் மழைக்காலங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை மாற்றி மக்கள் பாராட்டும் வகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சீரமைப்பு பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, தானும் இதுகுறித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுச்செய்ய போவதாகவும், சென்னையில் அடுத்தவாரம் ஆய்வு மேற்கொள்ள துவங்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், பருவமழைக்காலம் போன்ற பேரிடர் நேரங்களில் பாதிப்புகளை குறைக்க அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மீனவர்கள் பாதுகாப்பிற்காக தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் காற்றின் வேகம், புயல்-கனமழை உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.