மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 65 ஆண்டுகள் என மூன்று தலைமுறை மக்களின் கனவான இந்த திட்டத்திற்கு 2018ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், ரூ.1,916 கோடி ரூபாய் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், சனிக்கிழமை 10 மணிக்கு நடந்த இதற்கான தொடக்க விழாவில் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அத்திக்கடவு அவினாசி திட்டம்
அத்திக்கடவு அவினாசி திட்ட விபரம்
அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது காவிரியின் துணை நதியான பவானி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை திருப்பி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டருக்கும் மேல் ராட்சத குழாய்கள் அமைத்து, நீரேற்றம் மூலம் பவானி நீர் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் விடப்படுகிறது. இதற்கிடையே அமைந்துள்ள 1,045 குளம் மற்றும் குட்டைகளில் நீர் நிரப்பி அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.