மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவி சோமநாதன் பொறுப்பேற்பு
ராஜீவ் கவுபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) மத்திய அரசின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான அமைச்சரவை செயலாளராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். சோமநாதன் இரண்டு ஆண்டுகளுக்கு அமைச்சரவை செயலாளராக இருப்பார். தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சோமநாதன், கொரோனா தொற்றின்போது ஏழைகளுக்கான மத்திய அரசின் நிவாரணத் திட்டமான பிஎம் கரீப் கல்யாண் யோஜனா மற்றும் ஆத்மாநிர்பார் பாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். சோமநாதன் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். மேலும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாக மேம்பாட்டுத் திட்டத்தை முடித்துள்ளார்.
மத்திய அரசு பணிகளில் டிவி சோமநாதன்
அவரது சாதனைகளில், சோமநாதன் 2017இல் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிய போது, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் உள்ளிட்ட நிதிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உலக வங்கியில் கார்ப்பரேட் விவகாரங்களின் இயக்குநராக செயல்பட்டுள்ள அவர், இந்தியாவின் நிதிச் செயலாளராகவும், செலவினத் துறை செயலாளராகவும் இருந்தார். ஜிஎஸ்டி அமலாக்கத்தின் போது வணிக வரி ஆணையர், சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குநர், முதல்வரின் செயலாளர் உள்ளிட்ட பல பணிகளை தமிழக அரசில் வகித்துள்ளார். அவர் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான ஆணையராக பணியாற்றினார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நிதி மற்றும் செயல்பாட்டு அம்சங்களில் முக்கிய பங்கு வகித்தார்.