தமிழ் புத்தாண்டை எப்போது கொண்டாடுவது; தை மாதமா? சித்திரை மாதமா? -பாகம் 1
தமிழ் புத்தாண்டைபுத்தாண்டை எப்போது கொண்டாடுவது என்ற கேள்வி நமக்கு எழுவதற்கு அரசியல் பிரச்சனைகளே பெரும் காரணமாக உள்ளன. "நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு..! அண்டிப்பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள்! தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!"- பாரதிதாசன் பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டு என்று கூறுபவர்கள் மேற்கூறிய பாரதிதாசனின் பாடலை அடிக்கடி கூறுவதுண்டு. மேலும், தமிழ் மாதங்களின் பெயர் தமிழில் இருக்கையில், ஆண்டுகளின் பெயர் மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் உள்ளது என்ற கேள்வியையும் அவர்கள் முன் வைக்கின்றனர். தை மாதம் கொண்டாடிய தமிழ் புத்தாண்டு ஆரியர்களால் பிற்காலத்தில் சித்திரைக்கு மாற்றப்பட்டது என்பது அவர்களது நம்பிக்கை.
திராவிட கட்சிகளும் தமிழ் புத்தாண்டும்
மேலும், தமிழ் புத்தாண்டு என்ற ஒன்றை தமிழர்கள் கொண்டாடியதாக தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் எந்த சான்றும் இல்லை. எனினும், தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கலை தமிழர்கள் கொண்டாடியதற்கான சான்றுகள் பல உள்ளன. ஆனால், அதை மட்டும் வைத்துக்கொண்டு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று உறுதியாக கூறிவிட முடியாது. அப்படியானால் ஏன் தமிழ் புத்தாண்டை எப்போது கொண்டாட வேண்டும் என்ற சர்ச்சை அடிக்கடி எழுகிறது. அதற்கு காரணம் திராவிட கட்சிகள் தான்! 1972ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, திருவள்ளுவர் ஆண்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி, தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்க நினைத்தார். "ஆரியர்களால் உருவான புத்தாண்டை விடுத்து, தமிழர்களின் நாளை புத்தாண்டாக அறிவிக்க" அவர் விரும்பினார்.