
இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு; தீபாவளி அன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்குப் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் என இரண்டு பகுதிகளில் காற்றழுத்த அமைப்புகள் உருவாகி வருவது கவனத்திற்குரியது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அக்டோபர் 18 (சனிக்கிழமை) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ள சுழற்சியானது, அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
வங்கக்கடல்
தென்கிழக்கு வங்கக்கடல்
மேலும், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி வாக்கில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதுவும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த வானிலை மாற்றங்களால், சனிக்கிழமை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், சென்னை, செங்கல்பட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. முக்கியமாக, தீபாவளி பண்டிகை அன்று செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.