இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை மையம் வார்னிங்
செய்தி முன்னோட்டம்
வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் கோவை, சேலம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (மே 26) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் மே 31-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியகிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதே இந்தத் திடீர் மழை மாற்றத்திற்குக் காரணமாகும்.
கனமழை
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்
இன்று செவ்வாய்க்கிழமை, தமிழகத்தின் பின்வரும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்திலான பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோவை (மலைப்பகுதிகள்) திருப்பூர் (மலைப்பகுதிகள்) நீலகிரி ஈரோடு சேலம் தேனி திண்டுக்கல் கன்னியாகுமரி
எச்சரிக்கை
கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகக் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்களுக்குப் பின்வரும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை (மே 27) வரை: தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். வெள்ளிக்கிழமை (மே 29) வரை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.