வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை; முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு நிம்மதியான செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வறண்ட வானிலையால் அவதிப்படும் மக்களுக்கு சற்று ஆறுதலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைப்பொழிவு
மழைப்பொழிவு முன்னறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று (ஏப்ரல் 2) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.