LOADING...
தமிழக வானிலை அப்டேட்: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மதுரை, தேனி, நீலகிரியில் இடி மின்னலுடன் மழை பெய்யுமா?
தமிழக வானிலை அப்டேட்

தமிழக வானிலை அப்டேட்: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மதுரை, தேனி, நீலகிரியில் இடி மின்னலுடன் மழை பெய்யுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Apr 04, 2026
06:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகப் பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மராத்வாடா முதல் தென்தமிழகம் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, இன்று நீலகிரி, தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்கள்

மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை முன்னறிவிப்பு

வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தென்தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், இந்த மழை அறிவிப்பு பொதுமக்களுக்குச் சற்றே நிம்மதியைத் தந்துருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை

வெப்பநிலை உயர்வு மற்றும் சென்னை வானிலை நிலவரம்

மழை ஒருபுறம் இருந்தாலும், வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், வடதமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் உணரப்படும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement