தமிழக வானிலை அறிக்கை: இன்று நீலகிரி, தேனியில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு என்ன அப்டேட்?
செய்தி முன்னோட்டம்
தமிழகக் கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27°C ஆகவும் பதிவாக வாய்ப்புள்ளது.
வட உள் தமிழக மாவட்டங்களில் ஆகஸ்ட் 16 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படலாம்.
தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.