இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 17) நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இப்பகுதிகளில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
மஞ்சள் எச்சரிக்கை
25 மாவட்டங்களுக்குக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 25 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாநிலத்தின் பிற பகுதிகளில் மிதமான மழை பதிவாகக்கூடும்.
சென்னை
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களின் வானிலை நிலவரம்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் வானிலை அறிவிப்பின்படி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, கடலோரப் பகுதிகளில் மேகக் கூட்டங்கள் அதிகரித்து மழை பொழிவு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பதிவான நிலையில், புயல் சுழற்சி மற்றும் காற்றின் குவிப்பு காரணமாக இன்று பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்யக்கூடும் என சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.