Loading...
நாளை முதல் மேலும் தீவிரமடையும் மழை! நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

நாளை முதல் மேலும் தீவிரமடையும் மழை! நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2026
05:39 pm

செய்தி முன்னோட்டம்

வட உள் கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாலும், தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை மற்றொரு தாழ்வுப் பாதை நிலவுவதாலும் தமிழகத்தில் மழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை (ஆகஸ்ட் 3) முதல் நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 4

ஆகஸ்ட் 4 வானிலை நிலவரம்

தொடர்ந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும், ஏனைய பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT