தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 12) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல, லட்சத்தீவுப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டங்கள்
நாளை மழை பெய்ய வாய்ப்புள்ள முக்கிய மாவட்டங்கள்
நாளை (அக்.12) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை வானிலை நிலவரம் & மீனவர்களுக்கான எச்சரிக்கை
சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கான பிரத்யேகக் காற்று அல்லது கடல் கொந்தளிப்பு எச்சரிக்கைகள் எதுவும் தற்போது விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.