
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி; நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு செய்யப்படுவாதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைப்பு கடைபிடிக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. சுவாசக் கோளாறு மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
விபரங்கள்
கடையடைப்பு அறிவிப்பு விவரங்கள்
வணிகர் சங்கங்களின் பேரவையின் அறிவிப்பைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மளிகைக் கடைகள், டெக்ஸ்டைல் மற்றும் ரெடிமேட் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஹோட்டல்கள், உணவகங்கள், மொபைல், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்கள் முழு நாளும் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் விநியோகம் மற்றும் பெட்ரோல் பங்குகள் போன்ற அவசியச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளான பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையடைப்பு, கரூரில் நடந்த சோகத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழகமும் அஞ்சலி செலுத்துவதைக் குறிக்கும் விதமாக உள்ளது.