
தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் உட்பட 45 பேருக்கு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்புச் செய்து, மாணவர்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் ஆசிரியர்களைப் பாராட்டவும், கௌரவிக்கவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 5 அன்று வழங்கவுள்ளார். இந்த ஆண்டு, நாடு முழுவதும் 45 பள்ளி ஆசிரியர்கள் இந்த உயரிய விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் விருது பெறத் தேர்வாகியுள்ளனர். சென்னை மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியின் ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூரில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை விஜயலட்சுமி ஆகிய இரு தமிழக ஆசிரியர்களும் விருது பெறுவோரில் அடங்குவர்.
விருது
விருது விபரங்கள்
விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு சான்றிதழ், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும். ஆசிரியர்களின் முக்கியத்துவம் மற்றும் அறிவைப் பகிர்வதில் அவர்கள் ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களில் மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து தலா மூன்று ஆசிரியர்கள், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இரண்டு ஆசிரியர்கள் அடங்குவர். மேலும், ஐந்து பி.எம். ஸ்ரீ பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்கள் செப்டம்பர் 3 முதல் 6 வரை புதுடெல்லியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.