
அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் செவ்வாய் கிழமை காலை 8:30 மணியளவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதன் கிழமை நண்பகலில் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
கனமழை
அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக, செவ்வாய் கிழமை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதன் கிழமை அன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 23 அன்று சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை தொடரும் என்றும், 24 ஆம் தேதி மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.