LOADING...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2025
08:23 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், செப்டம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° முதல் 3° செல்சியஸ் வரை உயர்ந்து இயல்பை விட அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸாகவும் இருக்கக்கூடும். மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கோவா-கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.