வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக் கிழமை (நவம்பர் 15) தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, சனிக் கிழமை காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
அதி கனமழை எச்சரிக்கை
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் விளைவாக, நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நவம்பர் 16 அன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17 அன்று காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய வடதமிழக மாவட்டங்களில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.